Saturday, 23 January 2016

எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம்பாஷா கட்சியில் இருந்து நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டி

ஜனவரி 23,2016, 11:56 PM


சென்னை,
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் ஜவாருல்லா, அஸ்லம் பாஷா நீக்கப்பட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
செயற்குழு கூட்டம்
சென்னையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில், தமீமுன் அன்சாரி உள்பட சிலரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜவாருல்லா எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். ஆனால், தமீமுன் அன்சாரி அந்த உத்தரவு செல்லாது, என்னை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, போட்டி பொதுக்குழுவை கூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, இருவரும் மாறி மாறி மனிதநேய மக்கள் கட்சி பெயரில் அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று தமீமுன் அன்சாரி தலைமையில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.
கட்சி அலுவலகம் சூறை
இதற்கிடையில், மதியம் 1.30 மணியளவில் சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் உள்ள தமீமுன் அன்சாரி கட்சி அலுவலகத்தில் 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது. அலுவலகத்தை சூறையாடிய பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.
ஜவாருல்லா தரப்பினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த அலுவலகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருவல்லிக்கேணியில் நடந்த செயற்குழு கூட்டத்திலும் யாரும் தாக்குல் நடத்தாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போக்குவரத்தும் வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டது.
தமீமுன் அன்சாரி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜவாருல்லா நீக்கம்
செயற்குழு கூட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க தலைமை நிர்வாகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும். எங்களுக்கு மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.
கட்சியின் கட்டுக்கோப்புக்கும், சட்டவிதிகளுக்கும் எதிராக ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஜவாருல்லா எம்.எல்.ஏ.வையும், அவருடன் இணைந்து செயல்பட்ட அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ.வையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் நீக்கியது. அதை இந்த செயற்குழு கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது.
அலுவலகத்தில் தாக்குதல்
செயற்குழு கூட்டம் அமைதியாக நடைபெறுவதை ஜீரணிக்க முடியாத ஜவாருல்லா, தனது ஆதரவாளர்கள் 50 பேரை தூண்டிவிட்டு கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். வன்முறை மிரட்டலுக்கு துவண்டுவிட மாட்டேன்.
எங்களுடைய அரசியல் பணி ஜனநாயக வழியில் தொடர்ந்து நடைபெறும். எங்கள் கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும், அதற்கு முழு பொறுப்பு ஜவாருல்லா தான்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment