பதிவு செய்த நேரம்:2016-01-03 15:52:07
ஐதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 30 பேர் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான மாணவர்களை, அமெரிக்கா அனுமதிக்க மறுத்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் படிக்க செல்வது வழக்கம். இந்நிலையில், அங்குள்ள இரண்டு பல்கலைக்கழகங்களை அமெரிக்க கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி அந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், கறுப்பு பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க சென்ற இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் இந்திய மாணவர்களிடம் கடுமையான விசாரணை மேற்கொள்கின்றனர். 2 நாட்கள் வரை தங்க வைத்து கேள்விகளை கேட்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் தங்களை குற்றவாளிகள் போன்று நடத்துவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவுக்கு படிக்க சென்ற மாணவர்கள் 30 பேர் கடந்த 2 நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment