Tuesday, 29 December 2015

அதிமுக - தேமுதிக கலவரத்துக்கு காரணம் காவல்துறையா...?


தஞ்சாவூர் ; தஞ்சாவூரில் தேமுதிக- அதிமுக கட்சியினரிடையே எழுந்த மோதலின் எதிரொலியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட  50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இருகட்சியினரிடையே எழுந்த இந்த மோதலை காவல்துறையினரே திட்டமிட்டு ஏற்படுத்தியதாக பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது இப்போது.
விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டதுக்கு திட்டமிட்டு முதல்வர் ஜெயலலிதா படம் போட்டு அதிமுகவினரால் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை அருகே அனுமதி வழங்கியதன் மூலம் கலவரத்துக்கு காரணம் காவல்துறையே என புகார் வாசிக்க தொடங்கியுள்ளனர் தஞ்சாவூரில்.தேமுதிக தலைவர் விஜயகாந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சாவூரில் நேற்று ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது மேடை அருகே பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் அகற்றினர்.

இதனால் கூட்டம் முடிந்து விஜயகாந்த் சென்றவுடன் அதிமுக நிர்வாகிகள் அந்த இடத்தில் திரண்டு தேமுதிகவினர் வைத்திருந்த விஜயகாந்த் பிளக்ஸை கிழித்தனர். கட்சியின் கொடியை தீ வைத்து கொளுத்தினர். இதனால் தஞ்சையில் இரு கட்சியினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக தொண்டர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு அவர்களும் தாக்கபட்டனர்.
இவை எல்லாம் நடந்தது காவல்துறையினர் முன்னிலையில் என்பதுதான் வேதனை. இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆர்வலர் ஒருவர்,“ எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அரசுக்கு எதிராக அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர் மெத்தனமாக நடந்து கொண்டதுதான் பிரச்சனைக்கு காரணம்.

அதிமுகவினரால் திறக்கப்பட்ட அந்த நிழற்குடையில் ஜெயலலிதாவின் படமும், அவர் பெயரும் பெரிதாக எழுத்தப்பட்டு பளீரென இருந்தது. விஜயகாந்த பேசிகொண்டே இருக்கும்போது முதல்வர் படத்தை பார்த்தார்.
உடனே அதை மறைக்க சொன்னார். தலைவரை ஜெயலலிதா படம் டென்ஷன் படுத்தியதாக கருதிய அவரது தொண்டர்கள் ஜெ படத்தை மறைப்பதற்கு பதிலாக விஜயகாந்த பிளக்ஸை எடுத்துவிட்டார்கள். உடனே விஜயகாந்த் என் படத்தை எடுத்தால் அந்த அம்மா படத்தையும் எடுக்க வேண்டும் என சொன்னார். தொண்டர்கள் உடனே அந்த படத்தை நீக்கிவிட்டார்கள் இதுதான் இவ்வளவு கலவரத்துக்கும் காரணம்.

அதிமுகவுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வெளியிடும் கட்சிக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுத்தது காவல்துறையினர் செய்த முதல் தவறு. குறைந்தபட்சம் ஏதேனும் சிக்கல் வராதவண்ணம் முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில் பாதுகாப்புக்கு போலீஸை நிறுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. பிரச்னை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அந்த இடத்தில் காவல்துறையினர் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
சமீபத்தில் தேர்தல் கூட்டணிக்காக மக்கள் நல கூட்டு இயக்கத்த சேர்ந்தவர்கள் விஜயகாந்தை சந்தித்தார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் கூட்டணிக்கு அழைத்தார். விறுவிறுப்பான அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்துவரும் வேளையில் முக்கிய தலைவராக விஜயகாந்தை ஏதேனும் பிரச்னையில் சிக்கவைத்து முடக்க மேலிட உத்தரவின்பேரில் காவல்துறை இப்படி நடந்துள்ளனர்” என்றார்.

சம்பவத்தின்போது காவல்துறையினர் முன்பே அதிமுகவினர் பெரும் மோதலை நிகழ்த்தினர். ஆனால் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறை இதில் 13 பேரை கைது செய்துள்ளனர் இப்போது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், முதல்வரை அவதுாறு பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் விஜயகாந்த் தரப்பினர் மீது வழக்கு பதிந்த காவல்துறை மிகவும் தாமதமாகவே அதிமுகவினர் மீது வழக்கு பதிந்துள்ளனது. அரசியல் கட்சிகளின் வழக்கமாக விளையாட்டுக்களுக்கு காவல்துறையினரும் துணை போகலாமா...



By: விகடன் 

No comments:

Post a Comment