Updated: December 29, 2015 12:30 IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து துப்பிய சம்பவம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக ஊடகத்துறை மீது ஏதாவது ஓர் அரசியல்வாதி விமர்சனம் செய்தால் மற்ற கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஏதோ தாங்கள் தான் தேசத்தின் நான்காவது தூணின் உற்ற நண்பர் போல் குரல் கொடுப்பர். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரை சரமாரியாக விமர்சிப்பர்.
ஆனால், இந்த முறை விஜயகாந்த் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்து துப்பிய சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் தயக்கம் காட்டினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கட்சியினரும் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு அழைத்துவரும் நிலையிலும் அவரை விமர்சிக்க தயக்கம் காட்டினர்.
விஜயகாந்த் செயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்கூறும்போது, "விஜயகாந்த் தெரிவித்த கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், அவர் அதை தெரிவித்த விதத்தை நான் ஆதரிக்கவில்லை" என்றார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரானசி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, "இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசத்தின் நான்காவது தூணை யாராவது இவ்வளவு தரக்குறைவாக விமர்சிப்பது தகுமா? இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "முதல்வராக பதவியேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா வாரம் தவறாமல் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்றார். ஆனால், அவர் சொன்னபடி நடந்து கொண்டாரா? இல்லை நீங்கள்தான் அவரை சந்தித்தீர்களா? இந்தக் கேள்வியை நான் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் நீங்கள் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விஜயகாந்த் தொடர்பான உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்" என்று மழுப்பினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இவ்விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என ஒற்றை வரியில் சொல்லி நழுவிவிட்டார்.
பாமக முதல்வர் வேட்பாளரும், எம்.பி.யுமானஅன்புமணி ராமதாஸ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அவர் பெயரை மக்கள் மாற்றிவிட்டனர். இனி அவரை விஜயகாந்து'தூ' எனவே கூப்பிடுவார்கள். அவரிடம் கூட்டணி குறித்து பேச செல்லும் கருணாநிதி, வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோருக்கு ஓர் அன்பான எச்சரிக்கை செய்கிறேன். அவரிடம் பேசும்போது சற்றே தள்ளி நின்று பேசுங்கள். இது என் வேண்டுகோள்" என்றார்.
அரசியல் தலைவர்கள் பலர் மழுப்பலாகவும், நாசுக்காகவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விஜயகாந்த், "நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்" எனக் கூறியுள்ளார்
No comments:
Post a Comment