Saturday, 26 December 2015

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு



ஸ்ரீநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர். | படம்: பிடிஐ.
கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தாயும் அவரது 3 வயது மகனும் பலியான சம்பவத்தை கண்டித்து, ஹுரியத் மாநாட்டு கட்சி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் முஷ்டாக் அஹமது என்பவர் சில தினங்களுக்கு முன் ஷமிமா அக்தர் என்ற பெண்ணையும், அவரது 3 வயது மகன் தோஹித்தையும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை நேற்று மூடப்பட்டன. பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், ஆட்டோ, கார் ஆகிய தனியார் போக்குவரத்து இயக்கப்பட்டன. எனினும் இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

கடந்த 19-ம் தேதி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் இஷ்தியாக் அஹமது என்பவரை, கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர் கேவல் சர்மா என்பவர் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கிராம பாதுகாப்பு குழுவை கலைக்கும்படி பிரிவினைவாத அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் அதற்கு வாய்ப்பு இல்லை என துணை முதல்வர் நிர்மல் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment