Monday, 28 December 2015

தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம்; பசு இறைச்சி அல்ல ஆட்டிறைச்சி: விசாரணையில் தகவல்

Updated: December 28, 2015 15:46 IST 
பசு இறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் மொகமது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் மீதான உ.பி. விலங்கு மருத்துவத் துறையின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது.

இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சகிப்பின்மை குறித்த விவாதங்கள் தலைதூக்கியது. எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தன.

இந்நிலையில் உத்திரப்பிரதேச விலங்கு மருத்துவத் துறை விசாரணை மேற்கொண்டது. அதில் மொகமது இக்லாக் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது பசு இறைச்சி அல்ல அது ஆட்டிறைச்சியே என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 15 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும் இந்த அறிக்கை.

இது குறித்து இக்லாக்கின் மூத்த மகன் சர்தஜ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “நாங்கள் இதனை அப்போதிலிருந்தே தெரிவித்து வருகிறோம். எங்கள் வீட்டின் ஃபிரிட்ஜில் இருந்தது ஆட்டிறைச்சி. எங்கள் உறவினர் ஒருவர் எங்களுகுக் கொடுத்தது. மாட்டிறைச்சி அரசியலை வைத்து லாபம் அடையும் நோக்கத்துடன் கூடிய அரசியலின் தூண்டுதலினால் உருவான வெறிக்கும்பலால் எங்கள் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இனி என் தந்தை உயிருடன் வரப்போவதில்லை. இனி யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என்று நான் இந்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment