பொது_சிவில்_சட்டம்_ஓர்_ஆய்வு
பாகம் -1
பாகம் -1
பொது சிவில் சட்டத்தை சட்ட ஆனையத்தின் ஆய்வுக்காக ஆளும் மத்திய பாஜக அரசு அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக சொல்லிவருகிறது.
பொது சிவில் சட்டத்தின் சாதக,பாதகங்களை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
ஆகையால் அதை தொடர் பதிவாக பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்...
இதை அனைவரும் படித்து அறிந்து கொள்ளுங்கள்...மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
✍🏿இந்த கட்டுரையை எழுதிய சகோதரர் பிஜே அவர்களுக்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக...
1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், "பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995 ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.
ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் மேற்கோள்கள், அ.ச. நடராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள, "இந்திய அரசியல் சாசனம்' (மூன்றாம் பதிப்பு) எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. - ஆசிரியர்
#பொது_சிவில்_சட்டம்_ஓர்_ஆய்வு
நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.
பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும், அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
வரம்பு ஏதுமில்லாத அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், "முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
"அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்'' என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
"குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்'' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.
நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், "இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment