Wednesday, 27 July 2016

இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்கலவையில் கடும் அமளி...


மத்திய பிரதேசத்தில் ரயில்வே நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மத்திய பிரதேசத்தில் மண்ட்சவுர் ரயில்வே நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக கூறி அவர்கள் மீது இந்து தல் என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இஸ்லாமிய பெண்கள் தொடர்பான தாக்குதல் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டார். ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் நக்வி நம்பிக்கை தெரிவித்தார். 
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் வைத்திருந்தது எருமை இறைச்சி தான் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் புபீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய உறுதி அளித்தார். 

No comments:

Post a Comment