புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை கடுமையாக பாதித்தது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்படும் சமூக ரீதியான பதற்றங்கள் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை பாதிக்கும். எனவே தற்போதைய அரசு தனது கொள்கைகளில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நாட்டில் அர்த்தமுள்ள பொருளாதார மாற்றங்களை செய்ய வேண்டுமானால், சமூக அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பது முன் நிபந்தனையாகும்.
எந்த வித சமூகரீதியான பதற்றங்களும் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை கடுமையாக பாதிக்கும். நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார புள்ளி விவரங்களில் மட்டும் இல்லை. சமூக நல்லிணக்கத்தின் மேம்பாட்டிலும் உள்ளது என்றார். இன்றைய திறந்த பொருளாதாரத்திற்கு இந்தியாவுக்கு வித்திடக் கூடிய பட்ஜெட்டை கடந்த 1991ம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 1992ம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை உருவாக்க முடியாமல் தடுத்து விட்டது என்று வேதனை தெரிவித்தார்.
பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள், சமூக பதற்றங்கள் ஆகியவை நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கின. இதுகுறித்து மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அத்வானி தலைமையில் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. நாட்டின் சமூக நல்லிணக்கம் குலைய அது காரணமாக அமைந்து விட்டது. இதனால் பொருளாதார ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல முடியாத சூழல் உருவானது என்று மன்மோகன் சிங் வேதனை தெரிவித்தார்.
1984ல் ராஜிவ் வெற்றியின் போதுதான் காங்கிரஸ் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இது நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் சுட்டி காட்டினார்.
No comments:
Post a Comment