Wednesday, 22 June 2016

வெளிநாடு பறக்க இனி சென்னை போக வேண்டாம்!! மதுரையில் பன்னாட்டு விமான நிலையம்!

மதுரை : 

தேசிய விமான கொள்கையில் மத்திய அரசு புது முடிவு எடுத்துள்ளதின் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்து விரைவில் கைகூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் ரூ.130 கோடியில் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் சர்வதேச விமானநிலையம் அமைவது இழுபறி நிலையிலேயே நீடிக்கிறது. ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் நவீன டெர்மினல் தயாராகி 6 ஆண்டுகளாகிறது. இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்காததால் வெளிநாட்டு விமான சேவை தடைபட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கார்கோ சேவையும் (சரக்கு முனையம்) செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. இதற்கு சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது. பன்னாட்டு விமானங்கள் இயங்க அனைத்து வசதிகளும் உள்ளன. அதற்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. 
சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, அபுதாபி, குவைத் ஆகிய நாட்டு விமானங்கள் மதுரைக்கு நேரடியாக விமான சேவை வழங்க தயாராக இருக்கின்றன. ஆனால் அந்த நாட்டு விமானங்கள் மதுரைக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்காமல் இருப்பதே காரணமாகும். இலங்கை தலைநகர் கொழும்புக்கு மட்டுமே ஏற்கனவே உள்ள அனுமதி நீடிக்கிறது. மதுரை விமான நிலையத்தில் சரக்கு முனையம் அங்கீகார நோட்டிபிகேசன் 2013ல் வெளியிடப்பட்டது. அதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சர்வதேச தரத்துடன் 3 ஏரோ பிரிட்ஜ், 3 கன்வேயர் பெல்ட், 2 எக்ஸ்ரே ஸ்கேனர், 7 சுங்கத் துறை கவுண்டர், 20 இமிக்ரேசன் கவுண்டர், பயணிகளை பரிசோதிக்கும் 16 கவுன்ட்டர் உள்ளிட்ட தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஆனால் வெளிநாட்டு விமானங்களைத்தான் காணமுடியவில்லை. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இங்குள்ளவர்கள் துபாய், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் வேலை பார்க்கின்றனர். தற்போது அவர்கள் சென்னை, திருச்சி அல்லது திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து காய்கறி, உலகபுகழ் மிக்க மதுரை மல்லிகை பூ, பழங்கள், ஜவுளி, ரெடிமேடு ஆடை, மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இதனை திருச்சி, கோவை, கொச்சி போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலையே நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை தேசிய விமான கொள்கையில் மாற்றம் செய்து புது முடிவு எடுத்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிலுள்ள சிறிய விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்து விரைவில் எட்டும் வாய்ப்பு கைகூடி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கூறுகையில், “மத்திய அரசு விமான துறையில் எடுத்துள்ள புது கொள்கை முடிவில் வெளிநாடுகளுடன் இருவழி விமான சேவை ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் கட்டுப்பாடு தளர்த்தி இருப்பதின் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு நம்பிக்கை ஒளி தோன்றி உள்ளது. மதுரையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே உடனடியாக இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்த்து பன்னாட்டு விமான சேவைக்கு வாசலை திறக்க வேண்டும்,” என்றனர்.

No comments:

Post a Comment