Wednesday, 29 June 2016

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?


தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.
இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்கள் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும்.
அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர், கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது. நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும்.
தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம். ஏழு நாட்களில் இந்த சான்றிதழ் கிடைத்து விடும். தாமதமானால் வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட கலெக்டரை அணுகலாம். மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.
அண்ணா பல்கலையில்,இந்த ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினகரன்-28/6/2016

No comments:

Post a Comment