Thursday, 26 May 2016

சபாநாயகராக தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன்.


தமிழக சட்டசபை சபாநாயகராக ப.தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்வாகிறார்கள். 2 பதவிகளுக்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
தமிழக சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அண்ணா தி.மு.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
3–-6–-2016 அன்று நடைபெற உள்ள 15–வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தலைவர் பதவிக்கான தேர்தலில் ப.தனபால் (அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதி), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் பொள்ளாச்சி வி.ஜெயராமனும் (பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி) அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
39 ஆண்டுகளுக்குப்பின் ப.தனபால் தொடர்ந்து 2-வது முறையாக சபாநாயகராக தேர்வாக இருக்கிறார். இதேபோல், 1962-ம் ஆண்டுக்கு பிறகு துணை சபாநாயகராக தொடர்ந்து 2 முறையாக பதவி வகிப்பவர் என்ற பெருமையை பொள்ளாச்சி ஜெயராமன் பெற இருக்கிறார்.

No comments:

Post a Comment