Wednesday, 23 March 2016

சூஃபி மாநாடும் சில தீர்மானங்களும் ஓர் ஆலோசனையும்!


உலக அமைதிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும்
டெல்லியில் நடைபெற்ற நான்கு நாள் சர்வதேச சூஃபி மாநாடு
பல நல்ல கோரிக்கைகளை அரசுக்கும்
முஸ்லிம்களுக்கும் வைத்துள்ளது.
அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் வெளியாகும்
தலையங்கம், செய்திகள் போன்றவற்றைக்
கண்காணிக்க அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்;
அல்காயிதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் குர்ஆனுக்கும்
நபிமொழிக்கும் தரும் தவறான விளக்கங்களை
முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்;
வகுப்புவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
என்ன என்பதை உடனுக்குடன் தெளிவுபடுத்த வேண்டும்;
முஸ்லிம் பெண்களுக்கு குர்ஆன் தந்துள்ள உரிமைகளை
முஸ்லிம் சமுதாயம் பறிக்கக் கூடாது, அவை முழுமையாகப்
பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்;
மதச் சண்டைகள், மோதலுக்கு வலு சேர்க்கும் கருத்து வேறுபாடுகள்,
முஸ்லிம்களைக் காஃபிர் என்று அழைப்பது
போன்றவற்றையெல்லாம் கண்டிக்கிறோம்;
நபிவழியில் அமைந்த சூஃபித்துவக் கொள்கையை
மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம்-
என்பன போன்ற தீர்மானங்கள் எல்லாம் வரவேற்கத் தகுந்தவையே.
ஆனால், சூஃபித்துவக் கொள்கையையும் ஆய்வுகளையும் மட்டுமே
முதன்மை நோக்கமாய்க் கொண்டு “கரீப் நவாஸ் பல்கலைக்கழகம்”
உருவாக்க வேண்டும், எல்லா மதரசாக்களிலும்
சூஃபிப் பாடங்களைப் போதிக்க வேண்டும்
என்றும் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்
ஏற்கனவே பல அரபிக் கல்லூரிகளிலும் மதரசாக்களிலும்
சூஃபித்துவம் போதிக்கப்படுகிறது; பல்கலைக்கழகங்களில் உள்ள
அரபி மொழித் துறைகளின் ஆய்வுகளும்
பெரும்பாலும் சூஃபித்துவ ஆய்வுகள்தாம்.
ஆகவே சூஃபித்துவப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக
இஸ்லாமிய அறிவியல் ஆய்வுப் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டு,
குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையிலான அறிவியல் ஆய்வுகளுக்கும்
கண்டுபிடிப்புகளுக்கும் வழி அமைக்க வேண்டும்.
மீண்டும் இப்னு ருஷ்தும்களும் இப்னு சீனாக்களும்,
அல் குவாரிஸ்ம்களும் இப்னு கல்தூன்களும் தோன்ற வேண்டும்.
-சிராஜுல்ஹஸன்

No comments:

Post a Comment