Monday, 28 March 2016

துபாயில் தவிக்கும் மீனவருக்கு இந்திய தூதரகம் உதவவில்லை!வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு!


நாகர்கோவில்: துபாயில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் உதவவில்லை என்று அம்மீனவர்கள் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் அஜ்மான் என்ற இடத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்களும், அரேபிய மீனவர்கள் 2 பேர் என மொத்தம் 25 பேர், கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அரேபியாவை சேர்ந்த படகின் கேப்டன் கமிஸ் என்பவர் கடலில் தவறி விழுந்து இறந்தார். மீனவர்கள் வெகு நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள நீதிமன்றம் ஒரு மாத விசாரணைக்கு பிறகு அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மீனவர்களின் முதலாளிகள், சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களின் பாஸ்போர்ட்களை திரும்ப கொடுப்பதாக கூறினர். 
ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கவில்லை. மீனவர் காணாமல் போன வழக்கில் சாட்சிகள் என்ற பெயரில் இவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டு சிறை போன்றுள்ள ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் சீராக கிடைக்கவில்லை. மீனவர்களின் உறவினர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக தற்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்குள்ள இந்திய தூதரகம் மீனவர்களுக்கு உதவிகள் செய்து வருவதாக பொய்யான தகவல்களை மத்திய அரசுக்கு கொடுத்து வருகிறது என்றும், நாங்கள் தினமும் உணவுக்கே கஷ்டப்படுகிறோம் என்றும், எங்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் அப் வீடியோ மூலம் அஜ்மனில் உள்ள குமரி மாவட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment