குஜராத் மாநிலத்தில் உள்ள சுராஜ் கிராமத்தில், பள்ளி மாணவிகள் ’செல்போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி செல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.2,100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டம், காதி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமமான சுராஜில், மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த மற்றும் செல்போனுக்கு உரிமையாளர் ஆக தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனால் படிப்பில் இருந்து கவனம் திசைதிரும்பிவிடும். இந்த தடை உத்தரவை மீறி எந்த ஒரு மைனர் பெண்ணாவது செல்போன் பயன்படுத்தினாலோ, தனக்கென ஒரு செல்போன் வைத்திருந்தாலோ ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அக்கிராம பஞ்சாயத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைனர் பெண்கள், வீட்டிற்கு உள்ளேயே பெற்றோர்களின் செல்போனில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பஞ்சாயத்து கேட்டுக் கொண்டு உள்ளது.
இது குறித்து அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் தேவ்ஷி வான்கார் கூறும்போது, ''எங்கள் பஞ்சாயத்தில் இந்த முடிவானது எந்தஒரு எதிர்ப்பும் இன்றி எடுக்கப்பட்டது. மைனர் பெண்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு செல்போன் பெரிதும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போன்களை இளைஞர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் ஒரு ’லவ் டிராக்’காகவே கிராம பஞ்சாயத்து பார்க்கிறது.
18-வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கிராம மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். படேல், தாகூர், தலித் என அனைவரும் தடைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். யாராவது இந்த தடை உத்தரவை மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும். தடை உத்தரவு பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே, கல்லூரி மாணவிகளுக்கு கிடையாது.
அவர்களுக்கு நல்லது மற்றும் கெட்டதுக்கு இடையே உள்ள வேறுபாடும் தெரியும். கல்லூரிகள் கிராமத்தில் இல்லை, நகரங்கள் அருகே உள்ளது. எனவே அவர்கள் பெற்றோர்களுடன் தொடர்பில் இருக்க செல்போன் அவசியமானது. மைனர் பெண்களை தொழில்நுட்பங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவையானது உள்ளது" என்று தெரிவித்தார்.
நன்றி:விகடன்
No comments:
Post a Comment