சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புதிதாக சுமார் 17 லட்சம் பேர், வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் தேதியில் இருந்து அக்டோபர் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, தமிழகம் முழுவதும் பெயர் சேர்க்க, நீக்க 17 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 16 லட்சத்து 18 ஆயிரத்து 526 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,88,60,889 பேரும், பெண்கள் 2,91,07,418 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4,383 பேரும் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட்டபோது தமிழகத்தில் 5,62,06, 547 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 16 லட்சத்து 18 ஆயிரத்து 526 பேருக்கும் வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் இருந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கும் பணி தொடங்கும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கே நேரில் வந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும்போது செல்போன் எண் அளித்த சுமார் 8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், எதற்காக நிராகரிக்கப்பட்டது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை நாளை முதல் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். தற்போது வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணைய இணையதளத்தில், வாக்காளர்கள் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யும்போது, தேர்தல் தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். ஒவ்வொருவரும் தனித்தனி செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில்தான் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கு மொத்தமுள்ள 5,75,773 வாக்காளர்களில் ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45 பேர் உள்ளனர். டெல்டா பகுதியில் குறைந்த வாக்காளர்கள் நாகப்பட்டினம் தொகுதியில் உள்ளனர். இங்கு மொத்தமுள்ள 1,63,189 வாக்காளர்களில் ஆண்கள் 81,038, பெண்கள் 82,151 பேர் உள்ளனர்.
No comments:
Post a Comment