
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 4 தினங்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பருவமழைக்காலம் முடிய 3 தினங்களே உள்ள நிலையில் தென் தமிழக பகுதியில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று நிலவரப்படி, ராமேஸ்வரத்தில் 7, பாம்பன், ராமநாதபுரம் 6, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி 3, பாபநாசம் 2 செ.மீ மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலை முதல் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று காரணமாக, கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இந்நிலையில், அடுத்த 4 தினங்களுக்கு அதாவது 29-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment