Saturday, 9 July 2016

சவுதி அரேபியாவில் அடுத்தடுத்து தாக்குதல்கள்! 2 பாகிஸ்தானியர் உள்பட 19 பேர் கைது?!

ரியாத்,

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவில், 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நபி மசூதியில் கடந்த 4–ந் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பாதுகாவலர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதே போன்று ஷியா பிரிவினர் பெருவாரியாக வாழக்கூடிய காதீப் நகர் மசூதிக்கு அருகிலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜெட்டாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கள் சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்த தாக்குதல்கள் தொடர்பான பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், 2 பாகிஸ்தானியர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
அதில் மதீனா நபி மசூதி தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், 26 வயதான நயீர் மாஸ்லம் ஹமாத் அல் பாலவி என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதிப் நகர் தாக்குதலை 3 பயங்கரவாதிகள் நடத்தியதாகவும், ஜெட்டா தாக்குதலை பாகிஸ்தானியரான அப்துல்லா கால்ஜார் கான் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment