திமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம் பிடித்துள்ளது என்றும் அக்கட்சிக்கு 59 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளபோதிலும், அதனை அதிகாரப்பூர்வமாக இருகட்சிகள் தரப்பிலும் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், கூட்டணிக்கு வலைவிரித்து பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து எந்த இறுதி செய்யப்பட்ட தகவலும் இல்லாத நிலையில், 234 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்கும் என்றே அக்கட்சியின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி என்று சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பாஜகவின் மேலிட பொறுப்பாளர் ஜவடேகர் சில நாட்களுக்கு முந்தைய தனது சென்னை வருகையின்போது உறுதி செய்தார்.
அதே போல விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, பாஜக கூட்டணியில் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை வலுவாக நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி, அதை உறுதிப்படுத்தும் வகையில், பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து பாஜக கூட்டணிக்கு அழைத்தார். ஆனாலும் விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை என்று அவரே தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் அவர் இந்த வார இறுதியில் மீண்டும் விஜயகாந்தை சந்திக்க உள்ளதாகவும், அப்போது இறுதியான முடிவு தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்புக் குறித்து விளக்கமளித்த தேமுதிக, ஜவடேகர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறியது.
இந்நிலையில், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள் அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு கண்டிப்பாக தேமுதிக வரும் என்று அக்கட்சித் தலைவர்கள் மேடைகள் தோறும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று (புதன்) இணையதளங்களில் தேமுதிக-திமுக கூட்டணி உறுதியானது என்றும், 59 சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இது குறித்து இரு கட்சிகளின் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக யாரும் இது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து வேட்பாளர் நேர் காணலில் பங்கேற்க வந்திருந்த தேமுதிக இரண்டாம் மட்ட தலைவர் ஒருவரை தொலைபேசியில் பிடித்து கேட்டபோது, "இந்தச் செய்தி வதந்தி. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேராது. தேமுதிக வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. அதில் விஜயகாந்த் பிஸியாக இருக்கிறார். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன" என்றும் தெரிவித்தார்.
மேலும் தங்கள் கூட்டணிக்கு தேமுதிகவை மிகவும் எதிர்பார்க்கும் திமுகதான், இத்தகைய செய்தியை பரப்பி வருவதாகவும் தேமுதிக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
கேப்டன்....சீக்கிரம் க்ளைமேக்ஸ ஓட்டு
No comments:
Post a Comment